காமமும் புனுவலும் - l'age d'or (Golden Age) - 1930
மனிதன் எல்லாவற்றையும் குழப்பமானதாகவும், கடினமானதாகவும் மாற்றிவிட்டானோ என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டிருக்கிறது. விலங்குகள் உறவு கொள்ள எளிதான விதி என்பது வலிமை மட்டுமே. ஆனால் மனித சமூகம் இந்த காமத்தை குழப்பமானதாக மாற்றியதைப் போல வேறு எதையும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி என்னதான் சமூகத்திற்க்கும், மக்களுக்கும் இதன் மேல் கோபம். கடுமையான விதிகள். புனுவல் தன்வரலாற்று நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"Men of my generation, particularly if they’re Spanish, suffer from a hereditary timidity where sex and women are concerned. Our sexual desire has to be seen as the product of centuries of repressive and emasculating Catholicism, whose many taboos… have turned normal desire into something exceptionally violent."
காமம் என்ற சொல் மனிதனின் இச்சை (ஆசை) என்ற பொருளில் நாம் பார்த்தால். சிலர் பொருட்க்கள் சேர்ப்பதில் ஆர்வமாய் இருக்கின்றனர், அவர்களை முதலாளித்துவர்கள் என இப்படத்தில் நாம் அடையாளம் காணலாம். மதம் மக்களை ஒன்றுபடுத்துகிறது, பெரும் திரளாக ஆக்குகிறது. பின்னாலில் மக்களை ஆளுகிறது. மாற்றவே முடியாத சிமெண்ட் கட்டிடம் போல. இப்படத்தில் கடினமான பாறைகள் முதல் காட்சி முதலே காட்டப்பட்டுவருகிறது. அதன் மேல் சர்ஸ்க்கான சிமெண்ட் கட்டிடம் கட்டப்படுகிறது. ஏற்க்கனவே மதம் என்ற மறுக்கமுடியாத உறுதியான அஸ்திவாரத்தின் மேல் சர்ஸ் அமையப்போகிறது. யார் அதை எதிர்க்க முடியும்? ஒருபக்கம் பிச்சைக்கார வீரர்கள் தங்கள் ஆயுதங்களுடன் அதனை எதிர்க்கவருகிறார்கள். நகைச்சுவை என்னவென்றால் அவர்கள் அந்த இடத்தை அடையும் முன்னரே ஒவ்வொருவராக தரையில் விழுந்து தவிக்கிறாரகள். மற்றொரு பக்கம் அழுக்கு ஈரமணலில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். காதலி இடும் சத்தம், புனித சர்ஸ்ஸின் பணிகள் ஆரம்பிப்பதற்க்கு எதிராக இருப்பதால், இருவரையும் பிரித்துவிடுகிறார்கள்.
யோசித்துப்பார்த்தால் நாடோடி குழுக்களில் கற்ப்பழிப்பு என்பதே கிடையாது. ஆனால் இப்போது இருக்கும் சமூகத்தில் மட்டும் எப்படி அது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்க்கு முதல் காரணம் நாம் அதனை மதத்தின் பெயராலோ அல்லது சமூகத்தின் பெயராலோ அடக்கிவைத்திருக்கிறோம். அடக்கிவைத்திருக்கும் எதுவும் உடைத்துக்கொண்டு வெளியே வரக்காத்திருக்கும். அதனை சரியாக கையாள நாம் வழிமுறைகளை உருவாக்கி வைத்திருக்க வேண்டும். காதல் என்பது ஒரு சிறந்த வழிமுறை. அதனை உன்னதமானதாக இலக்கியங்கள் மூலம் நாம் மாற்றிக்காட்டியிருக்கிறோம். ஆனால் பிரச்சனை என்பது சமூகம் காமத்தை எந்த வழிகளில் வந்தாலும் கட்டுப்படுத்துகிறது. பிராய்ட் பற்றி நான் பேசப் போவதில்லை. அவரைப்பற்றி பேசிப்பேசி சலித்துவிட்டது.
தனிமனிதனுக்கு காமம் என்பது எப்படிப்பட்டது என்பது இந்த படத்தின் முடிவில் வரும் காட்சிகள் காட்டுகிறது. இசை நடத்துபவரின் நிலை கண்டு இறங்கி, காதலி அவருக்கு முத்தம் கொடுக்கும் போது, அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத காதலன், பொறமை கொள்கிறான். பெண்ணை தன் உடைமையென நினைக்கிறான். காதலி தன் காதலன் சென்றுவிட்டதால், சிலையின் கால்களை நக்குகிறாள். தன் இச்சையை இப்படி வெளிக்காட்டுகிறாள். இது காமத்தின் கட்டுகளுக்கு எதிரான சுதந்திரத்தைக் காடுகிறது.
ஒருபக்கம் விதிகள், அது மனிதன் உருவாக்கிக்கொண்டது. மதமாக இருக்கலாம் அல்லது குழுவின் விதிகளாக இருக்கலாம். நன்றாக யோசித்துப்பார்த்தால் அது மக்களின் நன்மைக்காகவே உருவாக்கி இருப்பதாக இருந்திருக்கும். உதாரணமாக மதம். எங்கள் மதம் மனிதனை அழிக்க உருவாக்கப்பட்டது என்று சொல்ல எந்த மதத்தினராவது தலைப்படுபார்களா? அப்படியானால் உண்மையில் அது நன்மைக்குத்தானா? பதில் என்னவென்றால் எல்லாருடைய குறைந்தபட்ச நன்மைக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். அது எப்போது ஒரு சிலரின் நன்மைக்கு என மாறுகிறதோ அப்போது தனிமனிதன் பாதிக்கப்படுகிறான்.
மறுபக்கம் தனிமனிதன். சமூகத்தின் கடைசி அலகு. அவனுக்கு எல்லாம் தான் நன்றாக இருந்தால் போதும் என்கின்ற எண்ணம் மட்டுமே. அவனது சுயநலம் அதிகமாகும் போது மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். படத்தில் காதலன், அவனது காதலின் பொருட்டும் அடக்க முடியாத காமத்தின் பொருட்டும் காதலியின் அம்மாவை அறைகிறான், மற்றவர்களை உதாசீனப்படுத்துகிறான், அப்போது சமூகத்தின் விதிகள்தான் நிகர் செய்ய வேண்டும்.
கத்தோலிக்க மதத்தின் அடக்கு முறைகளால் பாதிக்கப்பட்ட காதலன். அவனது எதிர்வினை என்பது இப்படம். நம் நாட்டில் படம் பேசும் பிரச்சனை இல்லை என்பதால் சிலவற்றை மட்டும் தொட்டுச் செல்கின்றேன். ஆனால் நம்மை ஆண்டவர்கள் காமம் என்பது பாவம் என்கின்ற கருதுகோளை நம்மிடம்விட்டுச் சென்றிருக்கின்றனர். அதை ஒட்டிச் சில கேள்விகள் நம் மனதில் எழுந்தால் அது இந்த படத்தின் வெற்றி எனக் கொள்ளலாம்.
இந்த படம் 1930 களில் எடுக்கப்பட்டு ஒரு சில காட்சிகள் வெளியிட்ட நிலையில் தடைசெய்யப்பட்டது. நேரடியாக அது சர்ஸ்ஸை தாக்குகிறது என்னும் காரணம் மட்டுமே. அதன் பிறகு 1980 களில் தான் இப்படம் வெளியாகி இருக்கிறது. புனுவலின் masterpiece இது இல்லை என்றாலும். மீமெய்யியல் வரிசசையில் முக முக்கியமான படம்.



Comments
Post a Comment